Wednesday, May 1, 2013

பஸ்ஸ கொழுத்துங்கடா!

அன்பு நண்பர்களே , இது ராமதாஸ் நியூஸ் சம்பந்தமான பதிவு அல்ல...ஆனால்  நம் தமிழ் மக்கள் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு விசயத்தின் பதிவு....

இந்த பதிவை எழுதத் தூண்டியது , தற்போது ராமதாஸ் கைதால் , பொதுமக்களுடன் பஸ்ஸை கொழுத்த முற்பட்டதாக இன்று சுடச் சுட படித்தவுடன் என் நினைவு கொசுவர்த்தி சுத்த ஆரம்பித்துவிட்டது...

நான் வேலைக்கு சேர்ந்து முதன் முதலில் வாங்கிய காசில் , ஒரு நல்ல  BPL ஸ்டீரி யோ  வாங்கி , இசைப் புயல் பாடல்களை சுவாசித்துக் கொண்டிருந்த காலம் அது...பின்னர் அந்த வேலை என் படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாததால் அதனை விட்டு விட்டு , என் மூட்டை முடிச்சுகளுடன் , என் சொந்த ஊரை நோக்கி பயணப் படத் தொடங்கினேன்...

நான்    ஆசைப்பட்டு வாங்கிய அந்த செட்டை மிக கவனமாக அதன் அட்டைப் பெட்டியில் வைத்து , இறுக கட்டி , புதுசா   கட்டிகிட்டவன் பொண்டாட்டிய பத்திரமா அழைத்துப் போவானே , அது மாதிரி  அலுங்காம  குலுங்காம , பஸ்ஸில் கொண்டு போய்க் கொண்டிருந்தேன்...

எண்ணத்தில் பல கனவுகள் ,  என் வீட்டைச் சேர்ந்தவுடன் , நன்றாக சத்தமாக பாட்டை வைத்து அடுத்த வீட்டுக் காரனை நோக வைக்க வேண்டுமென்று ...ஏனென்றால் அவன் நான் சிறுவனாக இருந்த பொழுதிருந்தே , அவ்வாறு சத்தமாக பாட்டைப் போட்டு , எங்களை வெறுப்பேத்தியவன் ,  நமக்கு இப்போழ்து காலம் கனிந்து விட்டது என்று , சிறுபிள்ளையாக எனக்குள்ளே புளகாங்கிதம் அடைந்து கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நான் சென்ற பேருந்து ஒரு வழியாக பாண்டியில் இருந்து மதுரை வந்தடைந்தது.  அங்கிருந்து எங்கள் ஊருக்குச் செல்ல , ஒரு தனியார் வண்டியில் ஏறினேன்.  அப்போதெல்லாம் , தனியார் வண்டியில் தான் நல்ல எபக்டுடன் பாடல்கள் அலற விட்டுக் கொண்டே வேகமாக செல்வார்கள் , எனவே சீக்கிரம் என் பொக்கிசத்தை வீட்டில் கொண்டு சேர்த்து விடலாம் என்ற நப்பாசையில் அதில் ஏறினேன், எனக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று தெரியாமலே! என் ஆசை இசைப் பெட்டியை , ஓட்டுனர் அருகே , என்ஜின் பக்கத்தில் உள்ள இடைவெளியில் யார் காலிலும் படக் கூடாதென்று , பத்திரமாக வைத்து விட்டு , டிரைவர் சீட்டின் பின்புறம் உள்ள சீட்டில் , இசைப் பெட்டி என் கைக்கு அருகில் வாகாக இருக்குமாறு அமர்ந்து கொண்டே தேவுடு காக்க ஆரம்பித்தேன் ...

அந்த மதுரை டூ  ...  வண்டி -ஒரு படத்தின்   தலைப்பு கூட இதே தான்    ,எங்கள் ஊரை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் -   விரைவாகப் போய்க்கொண்டிருந்தது என் எண்ணங்களின் வேகத்திற்கு ஈடாக ...

வண்டி மதுரை பல்கலையைத் தாண்டி ,  கருமாத்தூர் நோக்கி சீரிய வேகத்துடன் செல்ல, தீடிரென்று காச் மூச்சென்ரு பின்பக்கம் ஒரே சத்தம் , 'எல
டைவரு , வண்டிய நிறுத்துடா' என்று, என்னவென்றால் அங்கிருந்த ஒரு சிறிய    ஊரில் , இரண்டு நபர்கள் இறங்க வேண்டுமாம் ...நம்ம டிரைவர் பதில் சொன்னார் , ' எ இது பாய்ண்டு  டு பாயண்டுரா , இங்கெல்லா நிறுத்தமாட்டேன் என்று வண்டியை ஓட்டத் தொடங்கினார் .. விடவில்லை அந்த இருவரும் , மதுரை பாசையில் டிரைவரை வய்யத் தொடங்கி , ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து , வண்டியின் முன்னே வந்து வலுக் கட்டாயமாக , வண்டியை நிறுத்த வைத்தார்கள் ...

நான் என்ன ஆகப் போகுதோ என்று பார்த்துக் கொண்டிருக்க , அந்த கிராம ஆட்கள் , சத்தமிட்டு மேலும் பலரை அழைக்க , அந்த ஊர் கூட்டம் , எங்கள் பஸ்ஸை  நோக்கி ஓடி வர ஆரம்பித்தது...எங்கள் பஸ்  டிரைவர் , இறங்கி , அங்கிருந்து வயக்காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்...

அந்த தீடிர் கும்பல் வண்டியில் நுழைந்து , ஒருவன் ஸ்டீரிங்கை பிடித்து சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்யத் தொடங்க , இன்னொருவன் , நான் அவ்வளவு நேரம் பாதுகாப்பாக வைத்திருந்த , என் ஆசை இசைபெட்டியின் மேல் நின்று கொண்டு கத்தினான் , 'எல்லாரும் மரியாதையா  இறங்கி ஓடுங்க , எங்க ஊர்ல நிக்காத வண்டிய கொழுத்தப் போரம்' என்று மிரட்ட ஆரம்பிக்க , உள்ளே உக்கார்ந்திருந்த சனம் எல்லாம் , துண்டக் காணோம் , துணியக் காணோம் என்று இறங்கி ஓடத் தொடங்கினார்கள்.

எனக்குள் ஒரே குழப்பம் , நான் ஆசையாக வாங்கிய அந்த இசைப் பெட்டியை விட்டு எப்படிச் செல்வதென்று , அதன் மேல் அவன் நடராசராக நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கையிலே ,  சரி என்னதான் ஆகுது பாப்போம் என்று இருக்க ,  அந்த நல்லவன் ஒரு வழியாக என் பெட்டியில் இருந்து இறங்கி , பயணிகளைத் துரத்துவதில் மும்முரமாக , நான் இதுதாண்டா சான்சு என்று, பல்க்காக இருந்த அந்த இசை பெட்டியை தூக்கிக் கொண்டு , அந்த பச்சை விட்டு இறங்கி , மற்ற பயணிகளுடன்  ஊரை விட்டு நாடகத் தொடங்க , அந்த ஊர் மக்கள் ஒரு வழியாக நாங்கள் பயணித்த பஸ்ஸை வயக்காட்டை நோக்கி  செலுத்தத் தொடங்கி இருந்தார்கள் ....

நான் வடிவேல் பாணியில் , 'ஆகா கொஞ்சம் விட்டுருந்தா  உசுரோட கொழுத்தி  இருப்பாயிங்க , தப்பிசொமுடா சாமி ' என்று ஒரே ஓட்டமாக அந்த ஊரை விட்டே ஓடி ,  அடுத்து வந்த கவருமெண்டு பஸ்ஸை நிறுத்தி , மற்ற பயணிகளுடன் பயணித்து ஒரு வழியாக என் ஊர் போய்ச் சேர்ந்தேன்.

அது என்னமோ தெரியல , நாம ஒரு விசயத்துல எந்த தப்பும் நடக்கக் கூடாதின்னு ரொம்ப கவனமா இருந்தக் கூட , விதி எப்படில்லாம் நம்மக்கு போக்கு காட்டிடுது பாருங்க ....எப்படியோ பயங்கரமான  அனுபவம்யா...

நன்றி கலந்த வணக்கம் இவ்வளவு நேரம் படிச்சதுக்கு ...நாமெல்லாம் உப்பைக் கொரைக்கனும்யா ,எல்லாம் ரத்தக் கொதிப்புதான் காரணமின்னு நினைக்கிறேன்  இந்த மாதிரி திடீர் கொந்தளிப்பு ஆர்பாட்டங்களுக்கு  குறைவே இல்லாத நம்ம தமிழ் நாட்டுல....



4 comments:

  1. ரசித்துப் படித்தேன். ஆமாம் கடைசியில் அந்த பி பி எல் ஸ்டீரியோ பெட்டி என்னவாயிற்று? அதைப் பற்றி எதுவும் எழுதவில்லையே.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு சகோ. ரசித்தேன் !

    ReplyDelete
  3. ம்ம்ம்.... நாம பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள்தான். இதை மத்தவங்க பயன்படுத்துவதுதான் வேதனை

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)